AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வருங்காலத்தில் மனித வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக மாறப்போகிறது. மனித உழைப்பிற்கு மாற்றாக இது மாறிவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், கடினமான பணிகளை மிக விரைவாகவும், துல்லியமாகவும், குறைந்த செலவிலும் செய்து முடிப்பதால் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். குறிப்பாக, அலுவலக பணிகள் மற்றும் கல்வித்துறையில் AI-ன் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்பெல்லாம் ஒரு முக்கியமான பிரசன்டேஷனை தயார் செய்ய வேண்டும் என்றால், மணிக்கணக்கில் பவர் பாயிண்ட் ஸ்லைடுகளை வடிவமைத்து, தகவல்களை தேடி, சரியான வண்ணங்களையும் எழுத்துருக்களையும் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், தற்போது அந்த காலம் மலையேறிவிட்டது. நீங்கள் கொடுக்கும் ஒரு சிறிய Promptஐ கொண்டு, முழுமையான பிரசன்டேஷனை ஒரே நிமிடத்தில் உருவாக்கித் தரும் மாயாஜாலத்தை AI டூல்ஸ்கள் செய்கின்றன.
அந்த வகையில் பிரசன்டேஷன் செய்வதற்கு தற்போது மிகவும் பிரபலமாகி வரும் தளம் Decktopus. நீங்கள் சொல்ல விரும்பும் தலைப்பை மட்டும் கொடுத்தால் போதும், அதற்கான விரிவான ஆய்வு, உள்ளடக்கம் மற்றும் பொருத்தமான படங்கள் என அனைத்தையும் இந்த தளம் தானாகவே தயார் செய்துவிடும். உங்களிடம் ஏற்கனவே தகவல்கள் இருந்தால், அதை அப்படியே ‘பேஸ்ட்’ செய்து நேர்த்தியான வடிவமைப்பை கொண்ட ஸ்லைடாக மாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
ஒருவேளை AI உருவாக்கிய வடிவமைப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், ஒரே கிளிக்கில் புதிய ஸ்டைல்கள் மற்றும் புதிய ஐடியாக்களையும் நீங்கள் பெறலாம். உலக அளவில் 45 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு பயனருக்கு வாரத்திற்கு சராசரியாக 10 மணிநேரத்தை இது சேமித்து தருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் 40% வேகமான பணியை நிறுவனங்கள் அடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் Drag & Drop எடிட்டர் வசதிதான். உங்கள் நிறுவனத்தின் லோகோ, பிரத்யேக வண்ணங்கள் மற்றும் எழுத்துருக்களை எளிதாக இதில் Drag செய்து சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் குழுவிற்கென ஒரு பிரத்யேக டெம்ப்ளேட்டை உருவாக்கி பகிர்ந்து கொள்வதும் மிகவும் எளிது. இது உங்களின் பிராண்ட் அடையாளத்தை அனைத்து ஸ்லைடுகளிலும் மாறாமல் அப்படியே பிரதிபலிக்கச் செய்யும்.
இனி வடிவமைப்பை பற்றிக் கவலைப்படாமல், உங்கள் கற்பனைக்கும் எட்டாத வகையில் மிக நேர்த்தியான பிரசன்டேஷன்களை Decktopus மூலம் வழங்க முடியும். தொழில்நுட்பம் நம் வேலையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், நமது படைப்பாற்றலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது என்பதற்கு இந்த தளம் ஒரு சிறந்த உதாரணமாகும். எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக்கொள்ள இத்தகைய AI கருவிகள் இன்றியமையாதவை.
